இந்தியாவில் 2026-ம் ஆண்டின் ஜூலை–செப்டம்பர் காலாண்டில், 60 தொடக்கப் பொதுப் பங்கு வெளியீடுகள் மூலம் 9 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.86,500 கோடி) திரட்டப்பட்டுள்ளது. இதுவரையிலான அதிகபட்ச காலாண்டு ஐபிஓ நிதி திரட்டல் இது என கிராண்ட் தோர்ன்டன் பாரத் அறிக்கை தெரிவித்துள்ளது.
அதே காலகட்டத்தில், தகுதிவாய்ந்த நிறுவன முதலீட்டாளர்களுக்கான 28 பங்கு ஒதுக்கீடுகள் மூலம் 4.8 பில்லியன் டாலர் (சுமார் ரூ.46,100 கோடி) திரட்டப்பட்டது. இரு வழிகளிலும் மொத்தம் 13.8 பில்லியன் டாலர் (சுமார் ரூ.1.33 லட்சம் கோடி) கிடைத்தது. இது அக்காலாண்டின் நிறுவன இணைப்பு, கையகப்படுத்தல் பரிவர்த்தனைகளின் மதிப்பைவிட அதிகமாகும்.நிறுவன இணைப்புகள், கையகப்படுத்தல்கள், தனியார் பங்கு முதலீடுகள் மற்றும் பொதுச் சந்தை நடவடிக்கைகளில் மொத்தம் 696 பரிவர்த்தனைகள் பதிவாகின. அவற்றின் மதிப்பு 36.9 பில்லியன் டாலர் (சுமார் ரூ.3.55 லட்சம்) கோடியாக இருந்தது.
ஐபிஓ மற்றும் நிறுவன முதலீட்டாளர் பங்கு ஒதுக்கீடுகளைத் தவிர்த்து, 608 பரிவர்த்தனைகளின் மதிப்பு 23.1 பில்லியன் டாலர் (சுமார் ரூ.2.22 லட்சம் கோடி). முந்தைய காலாண்டுடன் ஒப்பிடுகையில் எண்ணிக்கை 8 சதவீதம் உயர்ந்தாலும், மதிப்பு 36 சதவீதம் குறைந்தது. நிறுவன இணைப்பு, கையகப்படுத்தல் பிரிவில் 255 பரிவர்த்தனைகள் நடைபெற்றன. அவற்றின் மதிப்பு 13.2 பில்லியன் டாலர் (சுமார் ரூ.1.27 லட்சம் கோடி). எண்ணிக்கை 7 சதவீதம் உயர்ந்தபோதிலும், மதிப்பு 53 சதவீதம் சரிந்தது.
தனியார் பங்கு முதலீடுகள் 353 பரிவர்த்தனைகளில் 9.9 பில்லியன் டாலரை (சுமார் ரூ.95,200 கோடி) எட்டின. மதிப்பு 18 சதவீதம் உயர்ந்து, நடப்பாண்டின் அதிகபட்ச காலாண்டு அளவைப் பதிவு செய்தது. இந்தியாவுக்குள் வரும் வெளிநாட்டு முதலீட்டுப் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை எட்டு ஆண்டுகளில் இல்லாத உச்சத்தை அடைந்தது. மதிப்பு 2.6 மடங்கு உயர்ந்து, 4.2 பில்லியன் டாலராக (சுமார் ரூ.40,400 கோடி) அதிகரித்தது.
எரிசக்தி, இயற்கை வளங்கள் துறையில் 38 ஒப்பந்தங்களின் மதிப்பு 3 பில்லியன் டாலர்(சுமார் ரூ.28,800 கோடி). உள்கட்டமைப்பு மேலாண்மையில் 26 பரிவர்த்தனைகள், 2.8 பில்லியன் டாலராக (சுமார் ரூ.26,900 கோடி) பதிவாகின. பல்வேறு துறைகளிலும் முதலீட்டாளர்களின் நம்பிக்கை தொடர்வதை காட்டுவதாக அறிக்கை தெரிவித்துள்ளது.